இயக்குனர் நோலனின் அடுத்த பட ரிலீஸ் தேதி Edited Israel

ஹாலிவுட் படங்களில் திரைக்கதை மாயாஜாலத்தை நிகழ்த்தும் கிறிஸ்டோபர் நோலன், கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான 'பாலோயிங்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல்படம் சுமாரான வசூலைக் கொடுத்தாலும், திரைக்கதைக்காக விமர்சகர்களின் கவனம் பெற்றது. இரண்டாவதாக இவர் இயக்கி, கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'மொமெண்டோ' திரைப்படம் விமர்சகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வசூலையும் வாரிக்குவித்தது. கோலிவுட்டின் கஜினி படம் மொமெண்டோ படத்தின் திரைக்கதையினால் ஏற்பட்ட ஈர்ப்பினால் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த படத்துக்குப் பின்னர் நோலனின் புகழ் உலகெங்கும் பரவியது. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் பல இவரது படத்துக்காக தவம் கிடந்தன. இதுகுறித்து ஹாலிவுட் வட்டாரங்களில் ஒரு சம்பவம் கூறப்படுவதுண்டு. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இவருக்காக ஒரு புதிய படம் தயாரிக்க ஒப்புக்கொண்டு, அந்த தகவலை இவருக்கு இ-மெயில் மூலம் அனுப்பியது. செல்போன் கூட வைத்துக் கொள்வது வீண் என்று எண்ணும் நோலன் அந்த இ-மெயிலை பல மாதங்களாகத் திறந்து கூட பார்க்கவில்லையாம். இதனால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நோலனுக்கு அந்தத் தகவலை வார்னர் நிறுவனம் தெரிவித்ததாகக் கூறப்படுவதுண்டு.

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்காக இவர் இயக்கிய பேட் மேன் வரிசைப் படங்கள் இவரை உலக சினிமா ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்கச் செய்தது. இந்த படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமான 'ஜோக்கர்' கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. இதுவரை உருவாக்கப்பட்ட வில்லன்களின் ஜோக்கர் கதாபாத்திரம் முதன்மையானது என்று கூட சில மேற்கிந்திய ஊடங்கங்கள் இவருக்கு புகழ்மாலை சூட்டிக் கொண்டாடின.

கடந்த 2014 ஆண்டு நோலனின் இயக்கத்தில் வெளிவந்த இன்டர்ஸ்டெல்லெர் படம் இவரது திரைக்கதை உத்திகள் குறித்த ஆராய்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது.

இவரது பெரும்பாலான படங்கள் மனிதனின் எண்ணங்கள் குறித்தும், ஒவ்வொரு சூழலிலும் மனித மனத்தின் சிக்கலான முடிவெடுக்கும் திறன் குறித்தும் ஆராய்வது குறித்து பேசும். ஹாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராகப் பேசப்படும் நோலன், விசித்திரமாக சில நேரங்களில் குறும்படங்கள் இயக்குவதுண்டு. அந்த வகையில் கடந்த சில மாதங்கள் முன்பாக இவர் இயக்கி வெளிவந்த அனிமேஷன் வகைக் குறும்படமான 'குவே', சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

இவர் அடுத்ததாக இயக்கிவரும் திரைப்படம் வருகிற 2017 ஆம் ஆண்டு ஜூலை 21-ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் நடிப்பவர்கள், கதை என படம் குறித்த அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் நோலனுக்கு 10 ஆவது திரைப்படமாக அமையும்.

0 comments: